திங்கள், 7 பிப்ரவரி, 2011

நன்றியோடு

ஆடு
குட்டிபோட்டா
கொராகுட்டியா
பாரு...

மாட்டு
கன்னுபோட்டா
கெடேரிகன்னா
பாருன்னு சொன்ன
தாத்தா...

இதுவும்
பொட்டகுட்டியான்னு
இழிச்சிபுட்டு போனாராம்
எனைபார்த்து...

கொட்டங்குச்சியில்
குழம்பு சோறாக்கி
நுனாயிலையில் பரிமாறி
நுங்கு குடுக்கைக்கு
அழுதுகொண்டிருந்தவளுக்கு

மரப்பாச்சி
பொம்மை கொடுத்து
எவனுக்கு போங்கிபோடபோறியோ!
பொட்டசிருக்கின்னு
சொன்னாளாம்
அப்பத்தா...
 
பக்கத்து வீட்டு
அக்கத்து வீட்டு
பாப்பாவெல்லாம்
பள்ளிகூடம் போகுதுன்னு
பயந்து பயந்து போய்
சொன்ன அம்மாகிட்ட...
 
ஆமாம்!  

இவளா?
நாளைக்கு
நமக்கு
கஞ்சி ஊத்தபோறா?

ஆம்பள அவன்
படிச்சா போதும்
போடி.. போடி..
போசகெட்டவளேன்னு
சொன்னாராம்
அப்பா...

காரேறி
போகலன்னாயென்ன?
காடுவெட்டி
கஞ்சிகொடுப்பா
எம்மகனு சொல்லி
மூக்கசிந்தினாலாம்
அம்மா...

ஒங்க பொழப்புதான்
கூழுக்கும், கூலிவேலைக்கும்;
முடிஞ்சிபோச்சின்னா
இவளயேன் இன்னும்
பள்ளிகூடம்
அனுப்பலன்னுகேட்டு...

கைபிடித்து
கூட்டிப்போன

இராணி
ஆசிரியயை

இன்று
நன்றியோடு
பார்க்கிறேன்..

நானும்
ஒரு
ஆசிரியையாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக