வெள்ளி, 5 அக்டோபர், 2012

எனக்கென்னமா!



அடகுவைத்த 
அஞ்சி பவுனையும் மீட்டு 
அந்த அக்காவிடம் 
கொடுத்தாச்சி... 

அம்மா! 
உன்னோட 
அரைபவுன் தாலியையும் 
மீட்டு விட்டேன்... 

அப்பாவின் 
பாட்டன் சொத்தான 
அந்த 
மேட்டுக்காட்ட 
மெதுவா திருப்பியாச்சி...

மச்சி வீடு 
இல்லாவிட்டாலும் 
மனதுக்கு பிடிச்சமாதிரி 
ஒரு கருங்கல் 
கட்டிடம் கட்டியாச்சி..

ஆனா 
என்னவோ தெரியல 

வாங்கியனுப்பிய 
தொலைகாட்சி
பெட்டிமட்டும் 
அழுதுகொண்டே இருக்கிறதாம் 
மாமியார் மருமகள் 
பிரச்சனைகளோடு 
தம்பி சொன்னான் ...

கொட்டும் 
மழைக்கிக்கூட
நீங்கள் 
கோனிசாக்கை
தேடவேண்டிய 
அவசியம் இனி  
இருக்காது..

குடை வாங்கி 
கொடுத்தனுப்பியிருக்கேன் ..

அப்பாகூட 
மோட்டார் வண்டி 
வாங்கி இருக்காராமே!
பார்த்து போய்விட்டு 
பார்த்து வரச்சொல்லுங்க ..

அக்கா புருசன்கூட 
ஏதோ
கல்யாணத்தில நீங்க 
சொன்னபவுனை 
போடலன்னு 
இன்னும் 
அக்காவ சொல்லி சொல்லி,
திட்டுகிறாராம் 

பாவம் 
அதுவும் 
எத்தன நாளைக்குதான் 
மூக்க சிந்திகிட்டு இருக்கும் 
அதையும் எடுத்து 
போட்டுவிடுங்க...

தங்கைக்கு கூட ஏதாவது 
நல்ல மாப்பிளைக் 
கிடைத்தால் பாருங்க 
இந்த தையிலேயே
முடிச்சிடுவோம்..

தம்பிகூட 
அடுத்த ஆண்டு 
கல்லுரிக்கி  போவான்ல்ல?

பாட்டிய 
பத்திரமாய் பாத்துகங்க...

இப்படி 
தொலைபேசியில் 
பேசிக்கொண்டே 

மேல்கூரையில்லா 
வாகனமொன்றில் 
கொட்டும் மழையில் 
குப்பைப்  பையிக்குள்
குளிரில் நடுங்கிக்கொண்டே 
எனக்கென்னமா ?
நா இராசா மாதிரியிருக்கேன்...

நீங்க அங்கு 
பார்த்து பத்திரமா 
இருங்கன்னு 
சொல்லிகொண்டே 
பயணிக்கிறேன் 
வேலையிடம் நோக்கி...

இபோழுதாவது 
அப்பாவுக்கு 
நான் பிடிச்சபிள்ளையா என்ற 
கேள்வியோடு ...          

வியாழன், 4 அக்டோபர், 2012

மவுனம்

மவுனம் 

நெல்மணிகளின் 
மவுனம் 
வென்றுவிடுகிறது ...

தன்னை 
களத்துமேட்டில் 
அடித்து துவைத்தவனின் 
அடி வயற்றை 
நிறைத்து...

எப்பொழுதுமே !
பெரும்பாலான 
மவுனங்கள் 
வென்றுவிடுகின்றன...

ஆனால் 
என்ன பாவமோ 
தெரியல ...

கருவிலேயே 
தோற்றுவிடுகிறது 
பெண் சிசுவின் 
மவுனம் ...