சனி, 19 பிப்ரவரி, 2011

கும்மி பாடல்

கும்மி பாடல்


ஆலமரம் ஏலேலோ 
அரசமரம்... அரசமரம்...

அதுலரெண்டு குருவிங்க
ஆடுதுபார் ஊஞ்சலு                                                                                           ஊஞ்சலு...

வேடன் ஒருத்தன் வந்திட்டான் 
வில்லெடுத்து புடிச்சிட்டான்                                                                    புடிச்சிட்டான் ..

மாட்டிக்கிட்ட குருவிரெண்டும் 
மனசுக்குள்ள பேசிச்சான்
                                                                                                                                        பேசிச்சான்...

பாட்டுபாடி நாங்கருந்த 
பச்சமரம் காணல                                                                                                   காணல ...

கூடுகட்டி நாங்கருந்த 
காடுவழி காணல                                                                                                   காணல ...

ஒன்றுகூடி நாங்கதின்ன
உறவுகல காணல                                                                                                 காணல ...

ஊருக்குள்ள சாதிசண்ட 
உசுரகுடிச்சி போகுதே                                                                                       போகுதே ...

காட்டுக்குள்ள அந்தசண்ட 
கண்ணுக்குள்ள தெரியல                                                                                தெரியல ...

கூண்டுக்குள்ள அடச்சிபுட்ட 
குறத்திமகன் காணல                                                                                         காணல ...

தடியுனும்  தாத்தாவுக்கு
தவிக்கிறது புரியல                                                                                             புரியல ...

கூட்டைவிட்டு நாங்கபோக 
குரத்திமகன் காணல                                                                                         காணல ...

ஆத்துக்குள்ளே  ஏலேலோ 
அரசமரம் அரசமரம்        

சனி, 12 பிப்ரவரி, 2011

ஆடும் அவளும்...


வளர்ந்து விரிஞ்சமரம்
வருசமெல்லாம் பூக்குமரம்
வேலாயி பெத்தமக
வேதனைய கேளுமரம்...  

கரையோரம் காரமுள்ளு 
கரைநெடுக்க கள்ளிச்செடி 
காரமுள்ளு குத்துமுன்னு 
கணக்கா சேலைகட்டி 


வெள்ளாடு  ஓட்டிகிட்டு 
வேலாயி பெத்தமக
வேதனையா போவேங்க 
வெளிமுள்ளு குத்துமுங்க 


காடே  கெதியின்னு
கால்கடுக்க நடப்பேங்க
ஆடே கெதியின்னு 
அலைஞ்சி திரிவேங்க 

நாவுலுக்கி  திண்ணா
நாவபழம் கசக்குதுங்க 
நாபரிச்சி திண்ணா 
அரலிவித இனிக்குதுங்க 

முப்பது ஆனபின்னும் 
மூனுமுடிச்சி விழலிங்க
ஆடாதோட போல 
ஆளுயாரும் சீண்டலிங்க

எனக்குகீழ பிறந்ததெல்லாம் 
இடுப்புலயும் வத்திலையும் 
வச்சி திரியுதுங்க
வாக்கப்பட்டு போவுதுங்க  
                                                                                               
                                                            வளர்ந்து...
ஆத்தா கருவுல 
அண்டுனது தாமதமாம் 
தெத்துபல்லு ரெண்டு 
தெரியவே  தாமதமாம் 

பாவாடை சட்டைவிட்டு
பருவம்வர தாமதமாம் 
தாவணிக்கு வந்ததாமதம் 
தாளிக்கும் வந்திடிச்சே!

பூக்கும் மரமே
புலம்பி அழுகிறேனே
புத்திகெட்ட எங்கப்பன் 
போனயிடம் தெரியலையே!

போனமாசம் வந்த
பொன்னடத்து காரவுக
போடும்பவுனு குறையுதுன்னு
போயே சேர்ந்தாக

ஆட்ட வித்தாலும்
ஆறுக்கே முடியலிங்க
மீதி பவுனுக்கு
நானெங்க போவேங்க

நாபொறந்த நேரம்
நஞ்சிகொடி அறுக்குமுன்னே
வேலாயி எங்கம்மா
விதிமுடிஞ்சி போனாங்க

ஆட்டுக்குட்டி தயவால- என் உசுரு
அலைஞ்சி திரியுதுங்க
அத்துவான காட்டுக்குள்ள
அழுது புலம்புறேங்க

ஆட பொறந்திருந்தா
அறுப்புக்கு போயிருப்பேன்
பொண்ணா பொறந்ததால
புலம்பி அழுகுறேங்க

                                                                 வளர்ந்து...

வியாழன், 10 பிப்ரவரி, 2011

தாலாட்டு பாடல்

ஆராரோ ஆரிராரோ..
ஆராரோ ஆரிராரோ..

ஓணாங் கொடிபிடிங்கி 
உட்கார ஊஞ்சல்கட்டி
பால கொடிபிடிங்கி
படுத்துறங்க தொட்டில்கட்டி 

பாலகொடுத்து நானும் 
பாய்போட்டன் படுத்துறங்க 
பாலகனே கண்ணுறங்கு 
பால்மாடு கத்துதடா...
                                                             ஆராரோ...
யானையில ஊர்வலமா
என் கண்ணே-உனக்கு
எண்ணிரெண்டு தாதிமாராம்...

குதிரையில ஊர்வலமா 
என் கண்ணே-உனக்கு 
குடைபிடிக்க தாதிமாராம்...
                                                             ஆராரோ...
மாமன்மக உன்னை
மணமுடிக்க கேட்டாளாம் 
அத்தமக உன்னை 
அள்ளிபோக கேட்டாளாம்

அரசாலும் சூரியனே!
அச்சாரம் போட்டிடுவோம்
அழாத கண்ணுறங்கு...

ஆடுங் கத்துதடா 
ஆட்டுக்குட்டி அலையுதடா
குட்டிபோட்ட ஆடுரெண்டு 
குசுகுசுன்னு பேசுதடா

                                                            ஆராரோ...
உச்சி வெயிலாச்சி 
ஊரெல்லாம் போயாச்சி 
மத்தியான சோத்துக்கு
மாமவர  நேரமாச்சி...

காலையில போனமச்சான் 
காடுவெட்டி வாரமச்சான்-நம்ப 
காள உரங்களையே-நான் 
களத்துமேடு போகலையே!
                                                             ஆராரோ...
 

 
 
 

திங்கள், 7 பிப்ரவரி, 2011

நன்றியோடு

ஆடு
குட்டிபோட்டா
கொராகுட்டியா
பாரு...

மாட்டு
கன்னுபோட்டா
கெடேரிகன்னா
பாருன்னு சொன்ன
தாத்தா...

இதுவும்
பொட்டகுட்டியான்னு
இழிச்சிபுட்டு போனாராம்
எனைபார்த்து...

கொட்டங்குச்சியில்
குழம்பு சோறாக்கி
நுனாயிலையில் பரிமாறி
நுங்கு குடுக்கைக்கு
அழுதுகொண்டிருந்தவளுக்கு

மரப்பாச்சி
பொம்மை கொடுத்து
எவனுக்கு போங்கிபோடபோறியோ!
பொட்டசிருக்கின்னு
சொன்னாளாம்
அப்பத்தா...
 
பக்கத்து வீட்டு
அக்கத்து வீட்டு
பாப்பாவெல்லாம்
பள்ளிகூடம் போகுதுன்னு
பயந்து பயந்து போய்
சொன்ன அம்மாகிட்ட...
 
ஆமாம்!  

இவளா?
நாளைக்கு
நமக்கு
கஞ்சி ஊத்தபோறா?

ஆம்பள அவன்
படிச்சா போதும்
போடி.. போடி..
போசகெட்டவளேன்னு
சொன்னாராம்
அப்பா...

காரேறி
போகலன்னாயென்ன?
காடுவெட்டி
கஞ்சிகொடுப்பா
எம்மகனு சொல்லி
மூக்கசிந்தினாலாம்
அம்மா...

ஒங்க பொழப்புதான்
கூழுக்கும், கூலிவேலைக்கும்;
முடிஞ்சிபோச்சின்னா
இவளயேன் இன்னும்
பள்ளிகூடம்
அனுப்பலன்னுகேட்டு...

கைபிடித்து
கூட்டிப்போன

இராணி
ஆசிரியயை

இன்று
நன்றியோடு
பார்க்கிறேன்..

நானும்
ஒரு
ஆசிரியையாய்...
கரையோரம்

கோடைவிடுமுறையில்
கொளுத்தும் வெயிலில்
உன் முதுகில் நடந்த
ஞாபகங்கள்...

அளவில்
பெரிதாக இருந்தாலும்
அடுபெரிக்க
ஆத்தாசெருப்பை
மாட்டிகொண்டு
சுள்ளிபொருக்கையிலே
எத்தனைமுறை
கீரியிருப்பாய்...

பருவப் பெண்ணென்றும் 
பாராமல்
எத்தனைமுறை 
அந்த
அக்கா தாவணி
இழுத்திருப்பாய் ...

முந்தாநாள் கூட
முந்தானை இழுத்தியமே!

நீ 
எதை செய்தபோதும் 
ஆலமர விழுதில் 
ஆடிய ஊஞ்சல் 
மறப்பேனா?

அடிமரம் ஏறமுடியாமல்
அழுது தவித்ததை
மறப்பேனா?

அதிலிருந்து
விழுந்தபோது 
காயங்கள் கண்டுகொள்ளாமல் 

கால்சட்டை கிழிந்ததில் 
கருவாச்சி 
கலகலன்னு 
சிரிச்சத மறப்பேனா?

ஆட்டுகாளில்
அலைந்த களைப்பில்
கிழிந்த துண்டில் 
தலைசாய்க்க
கிறுக்கச்சி
கில்லிவிட்டுபோனத 
மறப்பேனா?

பாட்டி பல்லாங்குழி
விளையாட...

அக்காமக அஞ்சாங்கல்லு
விளையாட ...

பெருசுகள் கூடி 
வீட்டுக்கதை 
ஓராயிரமிருக்க...
ஊர்கதை பேச 
ஊருக்குள்ள சண்டை 
ஒண்ணுரெண்ட சொல்லு ...

எல்லாம்
மறந்துபோனாலும்

உன் 
கரையில் கிடந்த
புத்தகத்தில் 

என் 
உயிர் முடிச்சி 
அவிழ்ந்த கதை...

ஊரறியாமல்...

இன்னும் 
உள்ளுக்குள்ள 
கிடக்கு 

சுமைதாங்கி 
கல்லாய்...        
காகிதக் கப்பல்

அடுத்தவேளை
சாப்பாட்டுக்கும்
அடுத்தநாள்
வேலைக்கும்

அடைமழையை
அப்பா அம்மா
திட்டிகொண்டிருக்க..

அவள்மட்டும்
அடம்பிடித்தாள்

ஒரு 
கப்பலையவது
செய்துகொடுங்கலேன்று

ஒழுகும் வீட்டில்
ஓட்டிபார்க்க...        
வேண்டுதல்

அக்கினிசட்டி தூக்கியும்
பால்கொடமெடுத்தும்
மாரியாத்தாளுக்கு
நேந்துகிட்டார்கள்
மழை வேண்டி...

வேப்பமரங்களை
மொட்டையடித்தவாரே ...
பொக்கிசம்
இருபது வருடம்
போனபிறகும்

இன்னும்...
பத்திரமாய் இருக்கிறது
பரனிலுள்ள
பளையபெட்டிக்குள்...

என் 
முதல் காதல்

மனைவிக்கும் 
மகளுக்கும் 
தெரியாமல்... 
 
இன்றைய 
எதிர்பார்ப்பு

சூரியனை
தூக்கிலிட துடிக்கும் 
வியர்வை...

காலணியிலும்
கையுரையிலும்
கழுவமுடியாத
கட்டுமான கலவை...

இரண்டுக்குமிடையில்
நொடிமுள்ளின்
சிணுங்களோடு...

வேலையிட
மேற்பார்வையாளருக்கு
தெரியாமல்
தொலைபேசியில் 
தொடர்புகொண்டேன்...

திருமதி செல்வம் 
பார்த்துக்கொண்டே!
கங்கா, கோலங்கள்;
முடிந்தபிறகு
அழையுங்கலேன்றாள்
மனைவி...      
 





எப்படி வரும்
மனசு... 
ஆண்டுதோறும் 
மாரியாத்தாளுக்கு
மாவிளக்கு
மாவிளைதோரணம்
பாரதபாட்டுமாய்
அமக்களப்படும்...

கடைசி நாளன்று
கழுகுமரமேரி
பூசாரி ஒருத்தன்
எலுமிச்சம்பழம்
உருட்டிவிடுவான்

கல்யானமாகத பெண்கள்...
குழந்தையில்லாத பெண்கள்...
ஈரத்துணியோடு
மடியேந்துவார்கள்
மனசு வலிக்கும்

ஆண்டுகள் ஐந்தாகியும்
மாரியாத்தாளுக்கு
மனசு வரலயென்பார்கள்
போன நான்கு வருடமா
மடியேந்திய அதே பெண்கள்
இந்த வருடமும்...

மருமகளிடம்
வரதட்சணை கேட்கும்
மாமியார்களும்...

பெண் பிள்ளை என்றதும்
கருகளைப்பு
செய்ய சொல்கிற
மாப்பிள்ளைகளும்...
இருகின்றவரைக்கும்
மாரியாத்தாளுக்கு 
எப்படி
மனசுவரும்...  
         
a
இன்னும் 
பதில் சொல்லமுடியவில்லை 
அழுதவிழி
துடைத்துக் கொண்டு
நீ சென்றாய்...

அரசாங்க பேருந்தில்
ஐந்துமணிநேரம் பயணப்பட்ட
அடக்கமுடியாத
என் கண்ணீரை!

வட்டிக்கு பணம் கொடுத்தவனின்
வலதுகை தொட்டு துடைத்து
வட்டிகட்டாமல்
வடிக்காதே!
கண்ணீரை என்றது...

விமானமேறி
வேலையிடம்  வந்தபிறகும்
இன்னும்
பதில் சொல்லமுடியவில்லை

எப்போ!
வருவிகென்று
என் முகம்
உரசிபோன
உன் முந்தானைக்கு...