சனி, 12 பிப்ரவரி, 2011

ஆடும் அவளும்...


வளர்ந்து விரிஞ்சமரம்
வருசமெல்லாம் பூக்குமரம்
வேலாயி பெத்தமக
வேதனைய கேளுமரம்...  

கரையோரம் காரமுள்ளு 
கரைநெடுக்க கள்ளிச்செடி 
காரமுள்ளு குத்துமுன்னு 
கணக்கா சேலைகட்டி 


வெள்ளாடு  ஓட்டிகிட்டு 
வேலாயி பெத்தமக
வேதனையா போவேங்க 
வெளிமுள்ளு குத்துமுங்க 


காடே  கெதியின்னு
கால்கடுக்க நடப்பேங்க
ஆடே கெதியின்னு 
அலைஞ்சி திரிவேங்க 

நாவுலுக்கி  திண்ணா
நாவபழம் கசக்குதுங்க 
நாபரிச்சி திண்ணா 
அரலிவித இனிக்குதுங்க 

முப்பது ஆனபின்னும் 
மூனுமுடிச்சி விழலிங்க
ஆடாதோட போல 
ஆளுயாரும் சீண்டலிங்க

எனக்குகீழ பிறந்ததெல்லாம் 
இடுப்புலயும் வத்திலையும் 
வச்சி திரியுதுங்க
வாக்கப்பட்டு போவுதுங்க  
                                                                                               
                                                            வளர்ந்து...
ஆத்தா கருவுல 
அண்டுனது தாமதமாம் 
தெத்துபல்லு ரெண்டு 
தெரியவே  தாமதமாம் 

பாவாடை சட்டைவிட்டு
பருவம்வர தாமதமாம் 
தாவணிக்கு வந்ததாமதம் 
தாளிக்கும் வந்திடிச்சே!

பூக்கும் மரமே
புலம்பி அழுகிறேனே
புத்திகெட்ட எங்கப்பன் 
போனயிடம் தெரியலையே!

போனமாசம் வந்த
பொன்னடத்து காரவுக
போடும்பவுனு குறையுதுன்னு
போயே சேர்ந்தாக

ஆட்ட வித்தாலும்
ஆறுக்கே முடியலிங்க
மீதி பவுனுக்கு
நானெங்க போவேங்க

நாபொறந்த நேரம்
நஞ்சிகொடி அறுக்குமுன்னே
வேலாயி எங்கம்மா
விதிமுடிஞ்சி போனாங்க

ஆட்டுக்குட்டி தயவால- என் உசுரு
அலைஞ்சி திரியுதுங்க
அத்துவான காட்டுக்குள்ள
அழுது புலம்புறேங்க

ஆட பொறந்திருந்தா
அறுப்புக்கு போயிருப்பேன்
பொண்ணா பொறந்ததால
புலம்பி அழுகுறேங்க

                                                                 வளர்ந்து...

5 கருத்துகள்:

  1. புலம்பல் ரக கவிதைகள் நம்பிக்கை இல்லாத தன்மையை எடுத்தியம்புகிறது... வாழ்க்கையில் கல்யாணம் செய்யாமல் நிம்மதியாக வாழலாம் என்று, என்று இந்த உலகம் நம்பப் போகிறதோ.. ஆனால் அருமையான சொல்லாடல் உள்ள கவிதை..

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதைங்க. 30 வயது ஆகியும் திருமணம் ஆகாத பெண்ணின் ஏக்கங்களை அருமையா பதிவு செஞ்சுருக்கீங்க நண்பா. கலக்கல் கவிதை.

    கிராமத்தான் என்று சொல்லிக்கொள்வதில் நானும் பெருமையடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அழகான கவிதை நண்பரே!!
    Follow widget add பண்ணுங்க சீக்கிரமா!!

    பதிலளிநீக்கு