திங்கள், 4 ஏப்ரல், 2011

நேரமில்லை


கொசுக்கள் 
நசுக்கியே 
கொலை பழிச் 
சுமந்தவளே...

எறும்புகள் 
எனைகடிக்க 
உன் மார்புகள் 
அழுமே ... 

கால்பவுனுத் தாலியையும் 
கழட்டிக் கொடுத்தே 
மஞ்சள் கையிற்றை 
மாராப்புக்குள் ஒளித்தவளே...!

அடுக்குப் பானைக்குள் 
அஞ்சும், பத்துமாய் 
அழுக்கு படிந்துகிடந்த 
ரூபாய் நோட்டுக்களை...

நான் 
ஊர்விட்டுப் புறப்பட 
உள்ளங்கையில்  
தினித்தவளே...!

ஒரு நாள் 
ஊரிலிருந்து 
வந்தவன்
சொன்னான் ...

உங்க 
அம்மாவுக்கு 
உடம்புக்கு
முடியலன்னு ...

காகிதத்தில் 
கால்வைத்தப் பேனா 
'அ'வென எழுதும்முன்னே 
அலறிவிழுந்தது...

உன் 
மரணச் செய்தியை 
தாங்கிவந்த 
ஒரு தபாலை 
உடைத்ததில்...

எனக்காக 
ஆற்றுமணலில் 
அழுதுகொப்பளித்த 
கால்களை 
அதற்குள் கட்டியிருப்பார்களோ...!  

இல்லை 

எனக்காக...
சில்லறைக் காசுகளை 
முடிந்த முந்தானையை 
கிழித்து எள்ளும், தண்ணியும் 
இறைத்திருப்பார்களோ...!

இல்லை...  

நேரமில்லன்னு 
அங்கும் பங்காளிகள் சொல்ல 
இந்நேரம் 
இடுகாட்டுக்குள் 
இறக்கி வைத்திருப்பார்களோ ..!

எண்ணியவாறே 
இறங்கிய நான் 
இடறிவிழுந்ததில்...

எரிந்து முடிந்த
ஊதுபத்தியும் ...

உடைந்து சிதறிய 
ஒடுகலுமே..!

 அம்மா.. 
நான் இப்பொழுது 
உன் கல்லறையில் 
விளககுவைக்கும்
என் மகனிடம் 
சொல்வதே இல்லை  

பெரிதானால் 
வெளிநாடு போவென்று.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக