செவ்வாய், 26 மார்ச், 2013

மிதிபடும் பூக்கள்



தேன்கூடு தேசமென்றே தேடிவந்து பூத்தாயே 
வான்முட்டி மண்பார்த்து வாழ்ந்திடவே -தேன்மொழியே 
பெண்ணுடலை கூறுபோடும் பேய்நிறைந்த என்நாடு 
பண்கெட்டே  போன பரப்பு

ஆசை

அவள்
தொட்டு தூக்கவும்
நீட்டிய கால்களின்
இடுக்கில் குப்புறபோட்டு
குளிப்பாட்டி போட்டுவைக்கவும் ...

கார்த்திகை, மார்கழி
குளிரில்
அவள் கைகளுக்குள்
எனை அனைத்து
போர்வை போத்தவும் ...

பொழுது விடிஞ்சி
எழுந்து பார்க்கையில்
நான் அவள்
பக்கத்தில் இல்லாதபொழுது
அழுது அடம்பிடிக்கவும் ....

உனக்கு
உடம்புக்கு முடியலயாடா?
ஆசுபத்திரிக்கு போய்
காட்டிகிட்டு வருவோமுன்னு
வீட்டுக்கும், தண்ணீர் கட்டைக்கும்
போய் போய் வரவும்....

அழாதடா
இந்த
கொஞ்ச மருந்தையும்
குடிச்சிடு ...

யாரு உன்ன
அடிச்சா?
மகாம்மாவா?

மகாம்மா பேச்ச
நம்ம காய் விட்டுடுவோமுன்னு
சொல்லவும்...

எல்லா நேரமும்
அவளோட
பிஞ்சி இடுப்பில்
பிள்ளையாய் அமர

மரப்பாச்சி
பொம்மையாகப்போறேன்
என் மகள்
மதிவதனி விளையாட ....   

திங்கள், 12 நவம்பர், 2012

எழுவாய்


                           

நீ

ஏரோட்டி

பழகியவந்தானே!

எரிபடை விழுந்ததிற்கா

எல்லாம் முடிந்துவிட்டதென்று

முனகுகிறாய்?

 

இது

நீஉழுத காயமென்று

உறுதிகொள்….

 

நீ

பரம்படிக்க

பழகியவந்தானே!

பின்யெனடா

குண்டுகள் விழுந்த

குழிகளைக்கண்டு கூனுகிறாய்?

 

யானைகளை

பிடிப்பதற்குதானே!

குழிகளைப் பறிப்பார்கள்….

 

நீ யானையென்று

எதிரிக்கு தெரிந்திருகிறது

உனக்கு ஏன்

அது இன்னும்

புலப்படவில்லை?

 

ஆடையில்லாமல்

புதைக்கபட்டோமென்றுதானே!

அழுகிறாய்….

 

விதைகளை

எப்பொழுதும்

ஆடைகட்டி

அடக்கம் செய்ய முடியாது…

நீ விதை

 

மண்ணை

மயாணக்காடென்று

ஒருபொதும்

ஒதிக்கிவிடாதே!

 

மண்

புழுவின்

அசைவிற்கே

பொதி பொதியாய்க்

கொட்டும் பொழுது…

 

ஆயிரமாயிரம்

விரல்களின் தோண்டலுக்கா

தோள்கொடுக்காது?

 

முட்டு, மோது;

மண்ணுக்கே

மரணபயத்தை உண்டாக்கு

 

தாயின்

பனிகுடத்தை

உடைத்து தரையில்

விழுந்தவந்தானே நீ

 

அப்படித்தான்

அப்படித்தான்

எழுவாய்… எழுவாய்..

 

நாளை

ஈழமண் இருக்கும்

உன் காலடியில்…

 

வெள்ளி, 5 அக்டோபர், 2012

எனக்கென்னமா!



அடகுவைத்த 
அஞ்சி பவுனையும் மீட்டு 
அந்த அக்காவிடம் 
கொடுத்தாச்சி... 

அம்மா! 
உன்னோட 
அரைபவுன் தாலியையும் 
மீட்டு விட்டேன்... 

அப்பாவின் 
பாட்டன் சொத்தான 
அந்த 
மேட்டுக்காட்ட 
மெதுவா திருப்பியாச்சி...

மச்சி வீடு 
இல்லாவிட்டாலும் 
மனதுக்கு பிடிச்சமாதிரி 
ஒரு கருங்கல் 
கட்டிடம் கட்டியாச்சி..

ஆனா 
என்னவோ தெரியல 

வாங்கியனுப்பிய 
தொலைகாட்சி
பெட்டிமட்டும் 
அழுதுகொண்டே இருக்கிறதாம் 
மாமியார் மருமகள் 
பிரச்சனைகளோடு 
தம்பி சொன்னான் ...

கொட்டும் 
மழைக்கிக்கூட
நீங்கள் 
கோனிசாக்கை
தேடவேண்டிய 
அவசியம் இனி  
இருக்காது..

குடை வாங்கி 
கொடுத்தனுப்பியிருக்கேன் ..

அப்பாகூட 
மோட்டார் வண்டி 
வாங்கி இருக்காராமே!
பார்த்து போய்விட்டு 
பார்த்து வரச்சொல்லுங்க ..

அக்கா புருசன்கூட 
ஏதோ
கல்யாணத்தில நீங்க 
சொன்னபவுனை 
போடலன்னு 
இன்னும் 
அக்காவ சொல்லி சொல்லி,
திட்டுகிறாராம் 

பாவம் 
அதுவும் 
எத்தன நாளைக்குதான் 
மூக்க சிந்திகிட்டு இருக்கும் 
அதையும் எடுத்து 
போட்டுவிடுங்க...

தங்கைக்கு கூட ஏதாவது 
நல்ல மாப்பிளைக் 
கிடைத்தால் பாருங்க 
இந்த தையிலேயே
முடிச்சிடுவோம்..

தம்பிகூட 
அடுத்த ஆண்டு 
கல்லுரிக்கி  போவான்ல்ல?

பாட்டிய 
பத்திரமாய் பாத்துகங்க...

இப்படி 
தொலைபேசியில் 
பேசிக்கொண்டே 

மேல்கூரையில்லா 
வாகனமொன்றில் 
கொட்டும் மழையில் 
குப்பைப்  பையிக்குள்
குளிரில் நடுங்கிக்கொண்டே 
எனக்கென்னமா ?
நா இராசா மாதிரியிருக்கேன்...

நீங்க அங்கு 
பார்த்து பத்திரமா 
இருங்கன்னு 
சொல்லிகொண்டே 
பயணிக்கிறேன் 
வேலையிடம் நோக்கி...

இபோழுதாவது 
அப்பாவுக்கு 
நான் பிடிச்சபிள்ளையா என்ற 
கேள்வியோடு ...          

வியாழன், 4 அக்டோபர், 2012

மவுனம்

மவுனம் 

நெல்மணிகளின் 
மவுனம் 
வென்றுவிடுகிறது ...

தன்னை 
களத்துமேட்டில் 
அடித்து துவைத்தவனின் 
அடி வயற்றை 
நிறைத்து...

எப்பொழுதுமே !
பெரும்பாலான 
மவுனங்கள் 
வென்றுவிடுகின்றன...

ஆனால் 
என்ன பாவமோ 
தெரியல ...

கருவிலேயே 
தோற்றுவிடுகிறது 
பெண் சிசுவின் 
மவுனம் ...   

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

மறுபக்கம் 

கொடுக்கும் 
ஊதியத்தில் 
குடித்து 
கும்மாளம் 
அடிப்பவர்களே!

உங்கள்
மறுபக்கம் 

அடகுவைத்தத்
தாலியும்..
அம்மாவின்
அழுக்கு முந்தாணையும்..
அதில் முடிந்த
அஞ்சும், பத்துமென்பதை
அறிவிர்களா?
பிச்சை 

சேற்றில் இறங்க 
சேட்டை இல்லாமல் 
துண்டு விரித்தவனுக்கு 
மதகு 
பிச்சை போட்டது 
எதிர் நீச்சல் தெரிந்த 
கெண்டை குஞ்சிகளை...

புதன், 11 ஏப்ரல், 2012

சுடர்



உன்னை
யார்வேண்டுமானாலும்
கொண்டாடிவிட்டுபோகட்டும்
என்னால்
அப்படி முடியாது...

உனக்கு
சுடரென்று
பெயர்வைத்தவன் யார்?

நீ
பாம்பைவிடவும்
பயங்கரமானவள்...

பாம்பு
தான் ஈன்ற
குட்டியைத்தான்
தின்று தீர்க்கும்

நீயோ!
உன் தாயான
திரியையே!
தின்றுவிடுகிறாய் ..

அப்படியென்றால்!

நீ
பாம்பைவிடவும்
பயங்கரமானவள்தானே

ஊதியனைத்தால்
உன்னுடம்பு நோகுமென்று
எத்தனைமுறை
என்வாய் அடைத்திருப்பால்
எந்தாய் செல்லம்மாள்...

ஆனால்
நீயோ!
உன் அகலவாய்திறந்து
என் பிஞ்சி விரல்பிடித்து
ஊட்டிக்கொன்டாயே
ஒரு நாள்
மயானகாட்டில்
ஞாபகம் இருக்கிறதா?

நீ
துரோகிஎன்பதற்க்கு
இந்த ஒரு
ஆதாரம் போதாதா?

குலசாமி கோவிளில்கூட
கற்பூரம் உனைத்தானே
கண்ணில் ஒற்றிகொண்டோம்..

ஏழை
எங்கள் குடிசைகளை
ஏப்பம்விட்ட தீயே
உன்னை சுடரென்று
என்னால் சுத்திகரிக்கமுடியாது.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அதையும் தாண்டி



வட்ட நிலா
பார்த்து
வடிவழகி
எம்பொண்ணு
மதிவதனி
சொன்னாளாம் ...

இந்த நிலா
நாஎங்கப் போனாலும்
எங்கூடவே
வருதுமான்னு

அப்பாதாம்மா
உன்ன பார்த்துக்கச் சொல்லி
அனுப்பியிருக்காருன்னு
எம்மனைவிச் சொல்ல...

அதற்க்கு
உடனே!
குழந்தை கேட்டாளாம்...

அம்மா
அந்தநிலா
பேசுமான்னு?

இவளும்
குழந்தைதானேன்னு
இம் பேசுமேன்னு
சொல்லிவைக்க

இல்லமா!
அது பேசாதுமா
அதுக்குதான்
வாயே இல்லையேன்னு
சொன்னதாம் குழந்தை...

அதையும்
சமாளிக்க
அவள் சொன்னாளாம்
அது அப்பாகிட்ட
மட்டும்தாமா
பேசுமுன்னு....

உடனே!
அப்பனா
நாசொல்லுட்டாமா
நிலாகிட்ட

அப்பாவ
சீக்கிரம் வரசொல்லுன்னு
என்றதாம் குழந்தை...

பாவம்
குழந்தைக்கு
எப்படித் தெரியும்

நான்
வட்டிக்கடநென்னும்
வலைக்குள்
சிக்கியிருப்பது..